Thursday, 18 June 2009

கொஞ்சம் டார்வின், கொஞ்சம் ஐன்ஸ்டீன்

உங்களுக்கு இந்த அனுபவம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை, ஆனால் நான் பல சந்தர்பங்களில் இது மாதிரியான நபர்களை சந்தித்திருக்கிறேன்….எதற்கெடுத்தாலும், தமிழ் பொண்ணூங்கனா இப்படி தான் இருக்கணும், தமிழ்நாட்டுல எல்லாம் இப்படி தான், நம்ம நாட்டு மரபு இது தான், இப்படி தான் இருக்கணும், இதை மாற்றவே கூடாது என்று தங்களின் பல நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும், நாட்டுப்பற்று என்ற செண்டிமெட்டை வைத்து நியாயப்படுத்துகிறார்கள்.
இன்னும் சில பேர் இதற்கு ஒரு படி மேலே போய், நல்ல குடும்பத்துல இப்படி தான் இருக்கணும், தலைமுறை தலைமுறையா இது தான் எங்கள் குல வழக்கம் என்று குடும்ப பாரம்பரியம் என்று என்று ஏதாவது வெற்று செண்டிமெண்டை விடா பிடியாக பிடித்துக்கொண்டு தொங்குவார்கள்
இன்னும் சில பேர் இருக்கிறார்கள். உயர் ஜாதிகளில் எல்லாம் இப்படித்தான், இதை இப்படியே காபி அடித்து செய்தால் தானே கவுரவமாக இருக்கும் என்று எந்த விதமான சுயசிந்தனையுமே இல்லாமல் யாரோ செய்யும் அர்த்தமற்ற காரியங்களை அப்படியே அடிபிரளாமல் தானும் பிரதியெடுத்து பின்பற்றுவர்.
இவர்களை தவிர, எதற்கு வம்பு, நமக்கு உடன் பாடு இருக்கிறதோ இல்லையோ, பெரிசு சொல்லுகிறது, செய்து தொலைக்கலைன்னா, காதுல ரத்தம் வர வரைக்கும் ரம்பம் போட்டு பிராணனை வாங்கிடும், பிரச்சனை பண்ணாம் பேசாம செய்துட்டு போயிடலாம்” என்று ஒப்பேற்றி வருபவர்களும் பலர் இருக்கிறார்கள்
ஆனால் இந்த நான்கு வகை மனிதர்களையும் தாண்டி, இன்னொரு ரக மனிதர்களும் இருக்கிறார்கள், “எதுவாக இருந்தாலும், ஏன் எதற்கு என்ற விளக்கத்தை சொல், அது எனக்கு சரி என்று பட்டால், செய்கிறேன், இல்லை அந்த இறைவனே வந்து சொன்னாலும் செய்ய மாட்டேன்னா மட்டேன்” என்று அடம் பிடிப்பார்கள். சுயமாக யோசிப்பேன், சரி என்று பட்டால் தான் செய்வேன் என்று அழிசாட்டின்யம் செய்யும் இந்த மனிதர்களை பல பேருக்கு பிடிக்காது.
ஆனால் விசித்திரம் என்ன தெரியுமா, இந்த மாதிரி லாஜிக் இல்லைனா ஒத்துக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் இம்மனிதர்களால் தான் மனித சமுதாயமே உயர்ந்திருக்கிறது. புத்தர், மஹாவீரர், ஏசு, மாதிரியான மெய்ஞானிகள் ஆகட்டும், நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டீன், டாக்கின்ஸ், ஹாக்கிங் மாதிரியான விஞ்ஞானிகள் ஆகட்டும், லிங்கன், பாரதியார், நேரு, பெரியார் மாதிரியான சமூகஞானிகள் ஆகட்டும், எந்த துறை ஞானியாக இருந்தாலும், அவர்களில் பிறவி குணம் ஒன்று தான்: ஏற்கனவே யாரோ எவரோ, சொன்னதையோ, சொல்லித்தந்ததையோ, அப்படியே நம்பி, பழைய கட்டமைப்புகளுக்குள் மட்டும் இருந்து யோசிக்காமல், எல்லா விளும்புகளையும் தகர்த்தெரிந்து விட்டு, எந்த வித எல்லைகளுமே இல்லாத தாரள போக்குடன், திரைகளே இல்லாத நிர்வாண பார்வையால் இந்த பிரபஞ்சத்தை ஆராய்ந்து புது புது விதங்களில் யோசித்து, யாருக்கும் புலப்படாத பல அரிய கண்டுபிடுப்புகளை அநாயாசமாய் சொல்லிவிடுகிறார்கள்.
அதே நிர்வாண பார்வை கொஞ்சம் நமக்கும் இருந்தால் நம்முடைய சிந்தனை எப்படி மாறும்? கொஞ்ச நேரத்திற்கு நாம் யார், என்ன, எந்த ஊர் எந்த மதம் எந்த மொழி, எந்த ஜாதி என்பதை மறந்து, வேடிக்கையாய் ஒரு விளையாட்டில் ஈடுபடலாமா? கொஞ்ச நேரத்திற்கு ஒரு நியூட்டன் மாதிரி, ஒரு டாவின் மாதிரி, ஒரு பெரியார் மாதிரி, ஒரு டாக்கின்ஸ் மாதிரி யோசித்து பார்ப்போமா? இந்த ஞானிகளின் நிர்வாணப்பார்வையை கடன்வாங்கி நம் நம்பிக்கைகளை மறு பரிசீலனை செய்து பார்க்கலாமா?